ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைப் பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிகொண்டு ஏமன் நோக்கி சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும் 116-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தகவல் தெரிவித்துள்ளது. ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டை நோக்கிப் புறப்பட்ட இந்தப் படகு, ஓபோக் நகரின் குஹேரே பகுதி அருகே கடலில் சென்றபோது கவிழ்ந்து மூழ்கியது. இதில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் நீந்தி உயிர் தப்பிய நிலையில், அவர்களில் 64 பேருக்கு ஓபோக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா. புலம்பெயர்வோர் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜிபவுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109-ல் இருந்து 139 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.




