காவல்துறை வாகனங்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வாகனங்களில் யார் யார் கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்றவில்லை என்பது தொடர்பான விவரங்களை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கார் உள்ளிட்ட வாகனங்களில் உள்ளே அமர்ந்து இருப்பவர்கள் வெளியே தெரியாத வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தால் அவற்றை அகற்றவும் அபராதம் வசூலிக்கவும் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. மீண்டும் அந்த நடைமுறை யாரும் சரியாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு இருந்தது.
காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலேயே கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை உயரதிகாரிகள் வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்ற நேற்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். “காவல்துறை வாகனங்கள், காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்கள் ஆகியவற்றில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்படாத வாகனங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டிஜிபி அலுவலக இமெயிலுக்கு படம் எடுத்து அனுப்ப வேண்டும். நாளைக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.








