அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன- அமித்ஷா!

“அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜகவுடன் கூட்டணியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக வெளியேறியது.  இது தொடர்பாக முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

“அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

பாஜகவுடன் கூட்டணியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக வெளியேறியது.  இது தொடர்பாக முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி,  பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  எனினும், பாஜகவுடன் மறைமுகமாக அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது.  இதைத்தொடர்ந்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிமுக பொதுக்குழுவிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ளார்.  சில தினங்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளன.

அதேநேரத்தில்,  அதிமுக,  பாஜ கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளன.  இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அமித் ஷா பேட்டியளித்தார்.

அப்போது; “கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன.  வரும் மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்னும் இறுதி செய்யவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.