நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாருடன் எந்த கூட்டணி வைத்தாலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம்…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாருடன் எந்த கூட்டணி வைத்தாலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம்
பகுதியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்
தலைமையில், பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், வ.உ.சிதம்பரனாரின் இல்லத்தை புதுப்பொலிவு பெற முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த கேள்விக்கு, தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் முக்கியமான திட்டமாக இருந்தது. அனைத்துப் பெண்களின் திருமணத்திற்கும் இந்தத் திட்டம்
உதவி கொடுத்தது. இந்தத் திட்டத்தை எடுத்தது மிகவும் வருத்தத்துக்குரியது. மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டத்தை கண்டிப்பாக தொடர வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் வருந்தக்கூடிய செயல். எதிர்பக்கம் இருந்து வரக்கூடிய கருத்துக்கு பதில் சொல்லும் சூழல் அண்ணாமலைக்கு உள்ளது. எனவே தான் யார் அடித்தாலும் திருப்பி அடிப்பேன் என்று கூறியுள்ளார். அத்தகைய சூழலை யார் உருவாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தமிழ்நாடு வருகை குறித்த கேள்விக்கு, டெல்லியில் கெஜ்ரிவால் இருக்கலாம். தமிழ்நாட்டில் மக்களின் முடிவு என்பது வேறு விஷயம். யார் எந்த கூட்டணி வைத்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.