திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்டசபையில் ஒரு
மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என மதுரையில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசினர்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக் கட்டடத்தில்
வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள்,
தொழிலதிபர்கள் வாழ்த்தி பேசினர்.
இதையடுத்து, மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிச் சென்றோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்பர் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தோம். அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர். பாரத மாதா நம்பர் ஒன் என்று மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும். கருணாநிதி என்னிடம் பேசும்போது திராவிடர் என்று கூறினார். அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன், அது சமஸ்கிருதம் என்று கூறினேன். உங்களின் பெயரில் 40% சமஸ்கிருதம் என்று அவரிடம் விளக்க நூலை வைத்து விவரித்தேன். அதேபோல், உதயசூரியன் என்ற உங்கள் கட்சியின் பெயரும் சமஸ்கிருதம் தான் என்றும் கூறினேன்.
சங்கராச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தை எடுத்துச் சென்று
அனைவரையும் தோற்கடித்தனர். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிடா என்பதில் திராவிட என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள் இது திராவிடமாக மாறியது. நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் எங்களுக்குள் எந்த
ஒப்பந்தமும் கிடையாது.
புதிய தமிழனை உருவாக்க வேண்டும். ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை.
திமுகவின் செயலாளர் ராஜீவ் காந்தி மோசமாக பேசி வருகிறார். அதுதொடர்பாக வழக்கு ஒன்றை கொடுத்துள்ளேன். விரைவில் அவர் சிறைக்கு செல்வார். திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக்
கட்சியாக பாஜக வரும். கம்பராமாயணத்தை எழுதிய வால்மிகியும் ஒரு செட்டியூல் காஸ்ட் தான். ஆனால், அவரின் தாய், தந்தை பிராமணராக இருந்தவர்கள்.
கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர். தமிழில் பெயரை
வைக்கவில்லையே எங்கிருந்து வைத்தார். ரஷ்யன் பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு. கட்டாயம் என்று நான் கூறவில்லை. இந்தியை கற்றுக்கொள்ள விரும்புவர்களை ஏன் தடை செய்கிறீர்கள் என்றுதான் கேள்வி எழுப்புகிறேன். பெரியார், பெரியார் என்று கூறுகிறார்கள். பெரியார் இருந்திருந்தால் இன்று திமுக இருந்திருக்காது.
பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா
கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று
உயில் எழுதி வைத்தார். அதன்படி கோயிலை முறையாக பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார். இது கி.வீரமணிக்கு தெரியுமா?. அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார். கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என போடப்பட்டது. வெள்ளைக்காரன் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில்தான்.
நமது சட்டப்படி எந்த கோவிலையும் அரசு எடுத்துக் கொள்ள முடியாது என சுப்ரீம்
கோர்ட்டு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில் திமுக அரசு
கையில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். ஆனால், எல்லா கோயிலையும் கையில் எடுத்து அர்ச்சகர்களை நியமிக்கிறார்கள். எல்லா கோயிலையும் மீட்டெடுத்து பூசாரி கையில்
கொடுப்பேன் என்றார்.
-ம.பவித்ரா








