கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் – நியூஸ் 7 தமிழுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பிரத்யேக பேட்டி

கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் என நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில்  மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு…

கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் என நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில்  மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் மஜத ஆகிய கட்சிகள் மக்களை கவரும்  வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம்,  அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

பாஜக வும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி,  நாள்தோறும் 1/2 லிட்டர் நந்தினி பால் இலவசம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 3 இலவச சிலிண்டர்கள் என தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மஜத உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த பிரச்சாரத்தின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி ராணியுடன் நியூஸ் 7 தமிழின் சிறப்பு செய்தியாளர் வசந்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

“ தேர்தல் கருத்துக்கணிப்புகளை பாரதிய ஜனதா கட்சி  நம்புவதில்லை. மக்கள் மீது  மட்டுமே பாஜக நம்பிக்கை வைத்துள்ளது. நான் தேர்தலில் தோற்றுவிடுவேன் என கருத்துக் கணிப்பு சொன்னது. ஆனால் நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். இதனால் கருத்துக் கணிப்புகளை நாங்கள் நம்புவதில்லை.

பாஜக வெளியிட்டுள்ள  தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு  3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் , அரை லிட்டர் நந்தினி பால்   மற்றும் தானியங்கள் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக அளிக்க உள்ளோம்..

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச மருத்துவ சிகிச்சைகளும் அளிப்போம் என தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.  ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு எங்கள் வாக்குறுதிகள் அமைந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அதனை நேரடியாக காணமுடிகிறது. இந்த முறை பாஜக பெரும்பான்மையாக கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும். டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் நாங்கள் தலையிட முடியாது “ என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.