பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 28ஆம் தேதி முதல் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து பா.ஜ.க மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ், மாநில விளையட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனைத்தொடந்து பால்கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் வரும் 28 ஆம் தேதி பாதயாத்திரை தொடங்குகிறார். “எம் மண் எம் மக்கள்” என்ற பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். பாதயாத்திரை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி சென்னையில் பாதயாத்திரை நிறைவடைகிறது.
தொடக்க நாளின் போது சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பாதயாத்திரையில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஊழலுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்னோட்டமாக பாதயாத்திரை அமையும் என பால்கனகராஜ் குறிப்பிட்டார்.







