மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார்.
ராகுல் காந்தி மேற்கோள் காட்டிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகம் கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா இடையே படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து குறிப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது” என்றார். அதே போல உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியின் பேச்சினை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி ”ஆதாரப்பூர்வமற்ற தகவலை எதையும் நான் கூறவில்லை, மாறாக ராணுவ தளபதி நாரவாணி எழுதிய விஷயங்களை தான் நான் பேசுகிறேன்” என்றார்.
சபாநாயகர் ஓம் பிர்லா , 349வது விதியின் கீழ் புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை மக்களவையில் வாசிக்க முடியாது. அவைக்கு சம்பந்தமில்லாத விஷயம் குறித்தும் அவைக்குள் படிக்க முடியாது” என்றும் “விதிமுறைகளுக்கு உட்பட்டு ராகுல் காந்தி பேசவில்லை என்றால் அடுத்த உறுப்பினரை பேச அழைக்க நேரிடும்” எனவும் எச்சரித்தார்.
ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்டோர் ஆதரவு வழங்கினர்.
இதனை தொடர்ந்து ஓம் பிர்லா, அடுத்ததாக அகிலேஷ் யாதவை பேச அழைத்தார். ஆனால் அகிலேஷ் யாதவ் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்தார்
சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.







