மணிப்பூர் வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ள நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகாரை, டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் 15-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பல் முன்பு கடந்த 18-ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரிஜ் பூஷனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரிஜ் பூஷனுக்கு 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமையான இன்று நடைபெறும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பிரிஜ் புஷன் சிங்கிற்கு ஜாமின் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் புஷன் சரண் சிங் தனக்கு எதிரான சாட்சிகளையோ, புகார்தாரர்களையோ கலைக்கவோ, மிரட்டவோ முற்படக்கூடாது.
நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் நாட்டை விட்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது. பிணைத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மணிப்பூரில் கலவரக்காரர்கள் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமின் கொடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.







