நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பார்த்து ரசித்தார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் குடும்பத்தினருடன் விக்ரம் படத்தை பார்த்து ரசித்த புகைப்படத்தை சமூக வலைதளமான டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “விக்ரம் படத்தை கண்டு ரசித்தேன். உங்கள் (கமல்ஹாசன்) கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்” என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு வெளியான இரண்டாவது திரைப்படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் 700 முதல் 750 திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகியது.
ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை விக்ரம் படம் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
கைதி, மாநகரம், மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, சந்தான பாரதி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.








