அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரின் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகள் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆட்சியைத் தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும், பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கும் நிலையில் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் வாகனத்தின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக, அக்கட்சியினரைக் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்க வைத்ததுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, பாஜகவினர் செங்கல் மற்றும் கற்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த  தாக்குதலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பயப்படப்போவதில்லை. டெல்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.