எடியூரப்பா தலைமையிலான கர்நாடகா பாஜக அரசில் உட்கட்சி மோதல் வலுத்துள்ளதால் மாநில அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்று வரும் 29ம் தேதியுடன் 2 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. எடியூரப்பாவுக்கு எதிராக அவரது அமைச்சரவையிலும், எம்.எல்.ஏ-க்கள் மத்தியிலும் அதிருப்தி குரல் அதிகரித்துள்ளது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தான் ஆட்சியையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர்
சி.பி.யோகேஸ்வரா, வெளிப்படையாகவே இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று கர்நாடகாவின் பாஜக பொறுப்பாளர் அருண் சிங்கிடம் பாஜக எம்.எல்.ஏக்கள் தரப்பில் புகார் அளிக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மேலிடத்தின் அழைப்பின் பேரில் எடியூரப்பா 16ம் தேதியன்று தன் மகனுடன் தனி விமானத்தில் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடியிடம், உடல் நிலை காரணமாக தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி தான் ராஜினாமா செய்யும்பட்சத்தில் தனது மகனுக்கு முக்கிய பதவி கொடுக்கும்படியும் பிரதமரிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகிறது.
இதனால், அடுத்த முதலமைச்சராக யார் தேர்ந்தெடுக்கபடுவார் என்ற யூகங்களும் பெங்களூருவில் அதிகரித்திருக்கிறது. எடியூரப்பா முதலமைச்சராக நீடிப்பாரா என்ற குழப்பத்தால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “கர்நாடகாவில் பாஜக வலுவிழந்து விட்டது. முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக கட்சி எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் வெளிப்படையாக கூறுகின்றனர். இது போன்ற சூழல் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லை. கடந்த 8 மாதங்களாக பாஜகவில் உட்கட்சி குழப்பம் நீடிக்கிறது. இதனால் மாநில அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.








