“பாஜக அரசு பின்னோக்கி செல்கிறது” – நவீன் பட்நாய்க்!

ஒடிசாவில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசை அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாய்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒடிசா எதிர்க்கட்சித் தலைவரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாய்க் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். பொதுமக்கள் விலைவாசி உயர்வால் போராடி வருகின்றனர். வேலையின்மை அதிகரித்து வருகிறது.

பாஜக ஆட்சியின் கீழ், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியும் குறைந்துள்ளது. பாஜக அரசு பின்னோக்கி செல்கிறதோ என தோன்றுகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகை இதுவரை செலவழிக்கப்படவில்லை. மாநிலத்தின் நிதிநிலையும் சரிந்துள்ளது. உங்களால் பணத்தை செலவிட முடியாவிட்டால் பட்ஜெட்டின் அர்த்தம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பட்நாயக் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி, 2025-26 நிதியாண்டிற்கான (FY’26) ரூ.2.90 லட்சம் கோடி மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.