மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிஜேடி

ஒடிஸா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா, மானஸ் மங்கராஜ், சுலதா தேவ், நிரஞ்சன் பிஷி ஆகியோரை…

ஒடிஸா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது.

மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா, மானஸ் மங்கராஜ், சுலதா தேவ், நிரஞ்சன் பிஷி ஆகியோரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சஸ்மித் பத்ரா, சுலதா தேவ், மானஸ் மங்கராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. சஸ்மித் பத்ரா இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படவுள்ளார். அவருடைய சிறப்பாக பணியை கருத்தில் கொண்டு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும், மேற்கு மற்றும் கடலோர பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மானஸ் மங்கராஜ் கூறுகையில், “ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிஸா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நான் நிச்சயம் மாநிலங்களவையில் பேசுவேன்” என்றார்.

சஸ்மித் பத்ரா கூறுகையில், “மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் ஒடிஸாவில் இருக்கிறது. எனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிஜு ஜனதா தளம் கட்சிக்கு நன்றியுடன் செயல்படுவேன். ஒடிஸா மக்களின் உரிமைகளுக்காக நிச்சயம் போராடுவேன் என்றார் சுலதா தேவ். நிரஞ்சன் பிஷி கூறுகையில், “ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. பழங்குடியின மக்களின் நலனுக்காக நான் பாடுபடுவேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.