திருமணச் சடங்குகளும், கேளிக்கைகளும் உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அந்த திருமணச் சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சில விநோதமான பழக்க வழக்கங்களை இந்த கட்டுரையில் காண்போம்.
1) திருமணத்தன்று மணமக்கள் சிரிக்கவே கூடாது
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் திருமண நாள் அன்று மணமகனும், மணமகளும் சிரிக்கவே கூடாதாம். இப்படி ஒரு கண்டிப்பு எதற்கு தெரியுமா?. திருமணத்தன்று தம்பதி சிரித்துவிட்டாள் அவர்கள் தங்கள் மணவாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் சிரிப்பாக எடுத்துக்கொள்வார்கள், திருமணத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிற நினைப்பில்தான் இப்படி ஒரு சடங்கு காங்கோவில் கடைபிடிக்கப்படுகிறதாம்.
2) தினமும் ஒரு மணி நேரம் அழ வேண்டும்
சீனாவின் சில பகுதிகளில் நடைபெறும் திருமணங்களில், திருமணச் சடங்குகளின் ஒரு அங்கமாக ஒரு விசித்திரமான பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து திருமணம் நடைபெறும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு மணமகள் அழ வேண்டும். முதல் 10 நாட்கள் மணமகள் தனது தாயுடன் சேர்ந்து அழுவார். அடுத்த 10 நாட்களில் அவரது பாட்டியும் இந்த அழுகையில் சேர்ந்துகொள்வார். பின்னர் மணமகள் வீட்டைச் சேர்ந்த பிற பெண்களும் மணமகளுடன் சேர்ந்து தினமும் ஒரு மணி நேரம் அழுவார்கள். முற்காலத்தில் சீனாவின் ஸாகோ பகுதியின் இளவரசி ஒருவர் திருமணமாகி தனது கணவன் வீட்டிற்கு செல்லும்போது, அந்த இளவரசியின் தாய், தனது மகள் பிரிந்துசெல்வதை நினைத்து கதறி அழுவதை குறிப்பிடும் விதமாகவே இந்த சடங்கு சீனாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
3) அருவருப்பான பொருட்களை ஊற்றி சோதனை
ஸ்காட்லாந்தில் திருமண ஜோடியின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் பரிசோதிக்க ஒரு விநோத பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடும் தம்பதி மீது, உறவினர்களும் நண்பர்களும் தங்களுக்கு என்னென்ன அருவருப்பான பொருட்களை ஊற்ற வேண்டும் என்று தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் ஊற்றுவார்களாம். அதையெல்லாம் மணமக்கள் பொறுமையாக சகித்துக்கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் எந்த துன்பங்களையும் தாங்கிக்கொண்டு இருவரும் இணைந்திருப்போம் என்பதை மணமக்கள் பிறருக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த சடங்கு கடைபிடிக்கப்படுகிறதாம்.
4) தூய்மை பணியில் ஈடுபடும் தம்பதி
ஜெர்மனியில் நடைபெறும் திருமணங்களில், திருமண நாள் அன்று வீட்டின் முன்பு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரும் கூடி உணவுப்பொருட்களையும், உடைந்த பாத்திரங்களையும், குப்பைகளையும் கீழே கொட்டுவார்கள். அதனை புதுமணத்தம்பதி அகற்றி அந்த இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். புதுமணத்தம்பதி ஒருவருக்கொருவர் அனுசரணையாக செயல்பட்டு எந்த பிரச்சனையிலிருந்தும் மீண்டு வரவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கினை அவர்கள் கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
5) மணமகன் வெளியே சென்றால் மணமகளுக்கு முத்தம்
சுவீடனின் சில பகுதிகளில் திருமண வரவேற்பு நடந்துகொண்டிருக்கும்போது, மணமகளோ, மணமகனோ அந்த அறையைவிட்டு வெளியே வரக்கூடாது. அப்படி இருவரில் ஒருவர் வெளியே சென்றுவிட்டால் அறையில் இருக்கும் மற்றொருவருக்கு பிறர் முத்தம் கொடுக்க அனுமதி கொடுத்துவிட்டதாக அர்த்தமாகிவிடும். மணமகன் வெளியே சென்றால் மணமகளுக்கு முத்தம் கொடுக்க வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஆண்கள் போட்டிபோடுவார்கள். மணமகள் வெளியேசென்றால் மணமகனுக்கு அங்கிருக்கும் பெண்கள் முத்தமழை பொழிவார்கள். இதனால் வரவேற்பு நிகழ்ச்சி முடியும் வரை தம்பதி இருவரும் அங்கிருந்து வெளியேறாமல் கவனமாக இருப்பார்களாம்.
6) மணமகன் பாதத்தில் பிரம்பால் அடி
தென்கொரியாவில் நடைபெறும் திருமணங்களில் நடைபெறும் சடங்குகள் மணமகனுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அங்கு மணமகனை படுக்க வைத்து அவரது காலில் பிரம்பால் அடிப்பார்களாம். மணமகனின் மன உறுதியையும், உடல் வலிமையையும் தெரிந்துகொள்ள இந்த சோதனையை வைப்பார்களாம்.
7) மணமகள் உடையில் பணத்தை குத்தும் ஆண்கள்
கியூபாவின் சில இடங்களில் நடைபெறும் திருமணங்களில் புதுமணத் தம்பதிக்கு பொருளுதவி செய்வதற்காக ஒரு விநோத பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் திருமண நிகழ்வின்போது மணமகள் நடனம் ஆட வேண்டும். அப்போது அவருடன் சேர்ந்த விருப்பப்படும் ஆண்கள், மணமகள் உடையில் கரன்சி நோட்டுக்களை குத்த வேண்டும். இந்த தொகையை மணமக்கள் தங்களது திருமண செலவுகளுக்காகவும், ஹனிமூன் பயணத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்வார்களாம்.
8) மணமகன் டையை துண்டித்து வசூல்
ஸ்பெயினில் திருமணமாகும் ஜோடிக்கு நிதியுதவி செய்வதற்காக மணமகன் அணிந்திருக்கும் டையை வெட்டுவார்கள். அந்த டையை துண்டு துண்டாக வெட்டி அந்த ஒவ்வொரு துண்டையும் திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களிடம் விற்று பணம் வசூலிப்பார்கள். அந்த தொகையை திருமண ஜோடியிடம் மொய்யாக வழங்குகிறார்கள்.







