திரிபுரா முதலமைச்சர் பதவியில் இருந்து பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்துள்ளார்.
திரிபுராவை சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சிபிஎம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.
பிப்லப் தேவ் தலைமையில் இந்த தேர்தலை எதிர்கொண்ட பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி பிப்லப் தேப் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுராவின் முதலமைச்சராக இருந்து வந்த பிப்லப் தேப், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனி நபரைவிட கட்சி பெரியது என்றும், பிரதமர் மோடியின் வழிகாட்டலின் கீழ் தான் பணி ஆற்றி வருவதாகவும் கூறினார். திரிபுராவில் அமைதி நிலவவும், வளர்ச்சி ஏற்படவும் தான் கடுமையாக உழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்ததை அடுத்து பிப்லப் தேப் பதவி விலகி உள்ளார். கட்சித் தலைமையின் உத்தரவுக்கு இணங்க அவர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிப்லப் தேப் ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைநகர் அகர்தலாவில் விரைவில் கூட உள்ளது. மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்தே ஆகியோரை மேலிட பார்வையாளர்களாக கட்சி நியமித்துள்ளது.
Advertisement: