உயிரி தொழில்நுட்பத் துறையில் 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி: பிரதமர் மோடி

உயிரி தொழில்நுட்பத் துறையில் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Biotech எனப்படும் உயிரிதொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கான கண்காட்சி இந்தியாவில் முதல்முறையாக டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய…

உயிரி தொழில்நுட்பத் துறையில் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Biotech எனப்படும் உயிரிதொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கான கண்காட்சி இந்தியாவில் முதல்முறையாக டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உயிரி தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பெற்று வருவதை இந்த கண்காட்சி உறுதிப்படுத்துகிறது என குறிப்பிட்டார்.

கடந்த 8 ஆண்டுகளில் உயிரிதொழில்நுட்பத்துறை 8 மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிதொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள முதல் 10 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா இணையும் நாள் தொலைவில் இல்லை என்றார்.

வாய்ப்புகளின் நிலமாக இந்தியா மாறி இருப்பதாகக் குறிப்பிட்ட நரேந்திர மோடி, பலதரப்பட்ட மக்கள், பலவகையான பருவநிலையை கொண்ட பகுதிகள், திறன்மிகு மனிதவளம், எளிதாக தொழில்தொடங்குவதற்கான சூழல், உயிரிதொழில்நுட்பப் பொருட்களுக்கான தேவை ஆகியவையே இத்துறையின் வளர்ச்சிக்குக் காரணம் என்றார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு சில நூறு என்ற அளவில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை கடந்துள்ளது என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உயிரிதொழில்நுட்பத் துறையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.