பாஜக கூட்டணி வேட்பாளர் முர்முவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம்…

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.

இந்நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இந்நிலையில், ஒடிஸாவைச் சேர்ந்த முர்முவை நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய ஆதரவு அளிப்பதாக ஒடிஸா முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனார் என்று பெருமையை முர்மு பெறுவார். மேலும், பிரதீபா பாட்டீலுக்கு பிறகு இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் முர்மு பெறுவார்.

முன்னதாக, ஒடிஸா மாநிலம், ராய்ரங்பூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முர்மு செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு பழங்குடியின பெண்ணான நான், நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆவேன் என்று யோசித்தது கூட கிடையாது” என்றார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முர்முவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு அளித்துள்ளது. இன்று காலை ஆயுதம் ஏந்திய காவலர்கள் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினர் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.