முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஒரு போட்டியில் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டாஸ் வென்ற விராத் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத் தனர். பிருத்வி ஷா 31 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தவான், 43 ரன்களில் ஷர்ஷல் படேல் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்தவர்களில் ஹெட்மேயர் 29 ரன்களிலும் கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. விராத் கோலி 4 ரன்களிலும் தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமலும் நோர்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஆனால், அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அதிரடியாக ஆடினார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து மேக்ஸ்வெல் வந்தார். அவரும் பரத்தும் பந்துகளை நாலாபுறமும் விளாச, அந்த அணிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட பரத், அதிரடியாக சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்ரீகர் பரத் 52 பந்துகளில் 78 ரன்களும் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 51 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

Advertisement:
SHARE

Related posts

குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!

Ezhilarasan

கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்

Vandhana

“அதிமுக ஆட்சியில் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயம்“ – அமைச்சர் செந்தில்பாலஜி

Halley karthi