இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் பதிவு நடைபெற்றது.
கடந்த 1992-ம் ஆண்டு ”நாடோடி தென்றல்” என்ற படத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணி ஒன்றாக பணியாற்றினர். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ”தெக்கத்தி பொண்ணு” என்ற டிவி சீரியலின் டைட்டில் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு பிறகு திரைப்படத்துக்காக இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கவுள்ளனர்.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்துள்ளார். இதனால் மணிரத்னத்தை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.
தமிழ் சினிமாவில் ”தாஜ் மஹால்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், தான் இயக்கும் முதல் படத்தில் தனது தந்தையை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக இளையராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் பாடல் பதிவு நடைப்பெற்றது.
இந்தப் படத்தின் பாடல் உருவாக்கப் பணியின்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, சுசீந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது இளையராஜா பாடல் பாட்டிக்காட்ட அதனை மற்றவர்கள் ரசித்துக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.







