தமிழ்நாட்டில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 1230 கோடி மதிப்பில் 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்திற்கு கண்ணாடி இழை கேபிள்கள் மொத்தமாக 15 சதவிகிதம் நிலத்திற்கு அடியிலும், 85% வான் வழியிலும் மொத்தமாக 49,500 கி.மீ அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டம் மூலம், அரசின் அனைத்து இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகளை தங்கள் கிராமத்திலேயே பொதுமக்கள் பெறலாம்.
இந்த நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டெண்டர் அறிவிப்பை TANFINET நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








