முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

”கவர்ச்சி பாடலுக்கு காவி உடையா?”- ஷாருக்கான் பட பாடலுக்கு எதிராக வெடித்த சர்ச்சை


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

”கவர்ச்சி ஆட்டம் போட காவி உடைதான் கிடைத்ததா?” என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு எதிராக வட இந்தியாவில் இந்து அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன. கூடவே அவருடன் நடித்த ஷாருக்கானுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? என்பதை விரிவாக பார்ப்போம். 

2018ம் ஆண்டு வெளிவந்த ”ஜீரோ“ படத்தின் தோல்விக்கு பின்னர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளிவரும் படம் ”பதான்”. இடையில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவற்றில் கதாநாயகன் வேடம் ஏற்கவில்லை. கவுரவ வேடம்தான் ஏற்றிருந்தார். இந்நிலையில் காமெடி படமான “ஜீரோ” தோல்வி படமாக அமைந்த நிலையில் தனது கேரியரில் மீண்டும் ஒரு மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரில்லரான “பதான்” படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் 25ம் தேதி இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஜான் ஆபிராமுடன் ஷாருக்கான் இணையும் முதல் படம் பதான். இதில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பதான் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழுவினர் அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள ”பேஷாரம் ரங்“  என்கிற வீடியோ பாடலை, பட வெளியீட்டுக்கு முன்பே வெளியிட்டுள்ளனர். அந்த பாடலை சுற்றித்தான் தற்போது சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன.

பாடல் முழுக்க பிகினி உடையில் படுகவர்ச்சியாக வலம் வருகிறார் தீபிகா படுகோன். விதவிதமான வண்ணங்களில் பிகினி உடையில் தோன்றும் அவர் ஒரு காட்சியில் காவி நிறத்தில் பிகினி அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனமாடியிருக்கிறார்.  ஒரு பக்கம் இந்த பாடல் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்க,  மறுபுறம் பெரும் சர்ச்சையும் வெடித்துள்ளது. கவர்ச்சி பாடலுக்கு காவியை பயன்படுத்துவதா என வட இந்தியாவில் இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளனர். ஷாருக்கான் அந்த பாடலில் அணிந்த பச்சை உடையையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சர்ச்சையை முதலில் தொடங்கி வைத்தது மத்திய பிரதேச உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ராதான்.

காவி நிறம் அவமதிக்கப்பட்டதாகவும், காவியும், பச்சையும் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் விமர்சித்த நரோத்தம் மிஸ்ரா, அழுக்கான சிந்தனையோடு இந்த பாடல்  உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நாட்டை துண்டாட நினைக்கும் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தீபிகா படுகோன்,  தற்போது தனது சிந்தனையை இந்த பாடல் மூலம் ஒவ்வொரின் முன்பும் வெளிப்படுத்திவிட்டதாக நரோத்தம் மிஸ்ரா விமர்சித்தார்.  “வைஷ்ணவி கோயிலுக்கு சென்று ஷாருக்கான் வழிபடுவது சந்தோஷம். ஆனால் அவர் தனது படத்தின் பாடலில் பெண்களை இப்படி ஆபாசமாக சித்தரிக்கலாமா” என்று ஷாருக்கானுக்கும் நரோத்தம் மிஸ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்களைத் தொடர்ந்து பதான் படத்திற்கும், பேஷாரம் ரங் பாடலுக்கும் கடும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழத் தொடங்கின. ”தியேட்டர்களை கொளுத்துவோம்” என மிரட்டல்கள் வரும் அளவிற்கு அது சென்றது. “boycott pathan” என்ற hastagம் twitterல் ட்ரெண்டாகத் தொடங்கியது.

பேஷாரம் ரங் பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் முகேஷ் கண்ணா,  இது போன்ற ஆபாசங்கள் நிறைந்த பாடலை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த பாடலுக்கு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பான உலாமா வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபாசமான காட்சிகளைக் கொண்ட பதான் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட  தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எதிர்ப்பு ஒருபுறம் அதிகரித்துகொண்டிருக்க, பதான் படத்திற்கும், தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கானுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வரத் தொடங்கியுள்ளன.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், “காவி உடை அணிந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும், காவி உடை அணிந்த சாமியார்கள் சிறுமிகளை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதும் நடக்கிறது. ஆனால், ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது தவறா?” எனக் கடுமையாக சாடினார். ”எதை தேர்வு செய்வது என்ற சுதந்திரம், நமது அடிப்படை உரிமை ஆகும்” என ட்வீட் செய்த நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா, ”பெண் வெறுப்பு என்ற தீமையை எதிர்த்து நாம் போராட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஷாருக்கான், ”குறுகிய கண்ணோட்டங்களுடன் சமூக ஊடகங்கள் இயக்கப்படுவது மேலோங்கியுள்ளது. எதிர்மறையான சிந்தனைகள் சமூக ஊடகங்களில் அதிகரித்துவிட்டது” எனக் குறிப்பிட்டார். பேஷாரம் ரங்  பாடல் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவே ஷாருக்கான் இவ்வாறு பேசியதாக இணையவாசிகள் கருத்துதெரிவித்தனர்.

பேஷாரம் ரங் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பிரபல பாலிவுட் நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான நுஸ்ரத் ஜகானும் கண்டனம் தெரிவித்துள்ளார். ”நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும். எப்படி நடக்க வேண்டும்…என்ன பேச வேண்டும் என கட்டளையிடும் போக்கு நம்மை எங்கு கொண்டு போய்விடப்போகிறதோ“ என நுஸ்ரத் ஜகான் கருத்து தெரிவித்துள்ளார்.  பேஷாரம் ரங் பாடலைச்  சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சுழன்றடித்துக்கொண்டிருக்க அந்த பாடல் இணையதளத்தில் 5 நாட்களில் 7 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது.

-எஸ்.இலட்சுமணன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதைக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்- இறையன்பு

G SaravanaKumar

இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியால் குத்தி வழிப்பறி

Web Editor

தன் குருநாதர் ரஜினியிடம் ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ், எதற்கு தெரியுமா ?

G SaravanaKumar