பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் மோடி இருந்தார். முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதியும் பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.
இந்த ஆவணப் படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்பபடுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்ந்கிறது. இதேபோல் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
An update on the situation in India. pic.twitter.com/FYVFwdQWxE
— BBC News Press Team (@BBCNewsPR) February 14, 2023
இந்நிலையில், இதுகுறித்து பிபிசி தனது ட்விட்டர் பதிவில், “வருமான வரி அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஊழியர்கள் பலர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர், ஆனால், சிலர் மட்டும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணைகளுக்கு ஒத்துழைத்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
மற்றொரு பதிவில், “நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு இந்த நேரத்தில் ஆதரவளித்து வருகிறோம். இந்த நிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புகிறோம். இந்தியாவில் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








