குஜராத் : ஆர்டிஐ தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை

குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தகவல் அறியும் உரிமைச் சட்டம், (Right to Information Act, 2005)…

குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம், (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும்.

 

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 18 மாதங்களில் 10 பேர் ஆர்டிஐ தாக்கல் செய்ய அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் உள்ள பெத்தாபூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அமிதா மிஸ்ரா என்பவர் தனது சம்பள விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல், மொடாசா நகரில் உள்ள கஸ்பாவைச் சேர்ந்த பள்ளி ஊழியரான சத்தார் மஜித் கலீஃபா, தனது நிறுவனம் தன்மீது எடுத்த நடவடிக்கைகளுக்காக ஆர்டிஐ தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கும் வாழ்நாள் முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாவ்நகரைச் சேர்ந்த சிந்தன் மக்வானா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் சொந்த காரணங்களுக்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தியதாக கூறி அமிதா மிஸ்ரா, மஜித் கலீபா, சிந்தன் மக்வானா உள்ளிட்ட 10 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் தகவல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இவர்கள் பல கேள்விகளை தாக்கல் செய்துள்ளதாகவும், அரசு அதிகாரிகளை துன்புறுத்துவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தியதாகவும் விளக்கமளித்துள்ளது.

 

ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த உத்தரவுகள் சர்ச்சைக்குள்ளானது மட்டும் இல்லாமல் முற்றிலும் சட்ட விரோதமானது என கருத்துகள் எழுந்துள்ளது. இவைகள் உயர்நீதிமன்றத்தின் மூலமாக சரிகட்ட படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.