தென்காசியில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த புகாரில் ரூ 9 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் ரூ 38.96 லட்சம் பணம் மற்றும் திருட்டுபோன 80 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான சைபர் குற்றங்கள் குறித்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை ஆன்லைன் சூதாட்டம், ஓடிபி மூலம் ஒருவர் வங்கியிலிருந்து பணத்தை திருடுதல், லிங்க் தொடுவதன் மூலம் பணத்தை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
இதுவரை ரூபாய் 9.17 கோடி மதிப்பிலான பணம் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் ரூபாய் 31 லட்சத்தி 67 ஆயிரத்து 196 ரூபாய் பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த 4 நபர்களுக்கு ரூ 7.28 லட்சம் மீட்டு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரூ 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் மீட்கப்பட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதுவரை தென்காசி மாவட்டத்தில் மட்டும் 533 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனகா காளமேகன்







