ஐபிஎல் இறுதி போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் – பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 191 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று(ஜுன்.03) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் கோப்பை கனவுடன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களாக விராட் கோலி ஃபில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபில் சால்ட் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வால் 24 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்ற விராட் கோலி 35 பந்துகளுக்கு 43 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து ரஜத் படிதார் 26 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 25 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்தவர்கள் இவர்களுக்கும் குறைவாகவே ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களுக்கு  9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 190 ரன்கள் அடித்தது.

பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கைல் ஜேமிசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். மேலும் அஸ்மதுல்லா உமர்சாய், வைஷாக் விஜய் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து 191 ரன்களை பஞ்சாப் அணி சேஸிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.