நாட்டில் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று தெலங்கானா பாஜக தலைநகர் பண்டி சஞ்சய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவின் கரிம்நகரில் நடைபெற்ற இந்து ஒற்றுமை யாத்திரையில் பேசிய பண்டி சஞ்சய் குமார், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார். மசூதிகளில் எங்கெல்லாம் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் வெளிப்படுவதாகத் தெரிவித்தார்.
மசூதிகள்தோறும் அகழ்வாய்வு மேற்கொண்டு எங்கெல்லாம் சிவலிங்கம் வெளிப்படுகிறதோ, அந்த மசூதிகளை இந்துக்கள் வசமும், எங்கெல்லாம் மண்டை ஓடுகள் கிடைக்கின்றனவோ அவற்றை முஸ்லிம்களிடமும் நிரந்தரமாக ஒப்படைக்கும் சவாலை ஏற்கத் தயாரா என அனைத்திந்திய மஜ்லிஸ் இ இட்டெஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஒவைசிக்கு, பண்டி சஞ்சய் குமார் சவால் விடுத்துள்ளார்.
நாட்டில் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருதுமொழிக்கு முழுமையாக தடை விதிக்கப்படும் என தெரிவித்த பண்டி சஞ்சய் குமார், மதரசாக்களில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதன் காரணமாகவே குண்டுவெடிப்புகள் நிகழ்வதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தின் 20ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நகருக்கு வருகை தந்தார். எனினும், அவரை சந்திப்பதை தவிர்த்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்திப்பதற்காக பெங்களூருவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பண்டி சஞ்சய் குமார் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









