“திறந்தவெளி வாகனங்களில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை” – கர்நாடக அரசு அறிவிப்பு!

வன விலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

கர்நாடகாவில் புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு கோடை விடுமுறை என்பதால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசி (33) என்பவர் சுற்றுலாவுக்காக துபாரே முகாமுக்கு சென்றிருந்தபோது ஆற்றங்கரையில் நின்று யானைகள் குளிப்பாட்டப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வளர்ப்பு யானைகளான ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ என்ற 2 யானைகள் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் நிலை தடுமாறிய மார்த்தாண்டா யானை கீழே விழுந்தபோது, அருகில் நின்றிருந்த துளசி யானையின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

யானைகள் மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்த நிகழ்வை அடுத்து, வன விலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. திறந்தவெளி வாகனங்களில் உடையாத கண்ணாடிகள், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும், அவசர காலங்களில் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.