அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர் கொடுத்தது- பாமக வழக்கறிஞர் பாலு

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர்கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.…

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர்கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொது மக்களிடம் திமுக எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து, பாமகவின் திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கொண்டிருந்தார். அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கு கூட தெரியும்.

ஆனால், ஜெயக்குமார் இதற்காகவே தன்னை தயாரித்து வந்தது போல், 1988ல் நாங்கள் தான் பாமகவுக்கு இடம் கொடுத்தோம் என்றும், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு இவர் எப்படி காரணம். உடன்படிக்கையின் படி நாடாளுமன்றத்திற்கான இடம் பாமகவுக்கு வழங்கப்படுகிறது. பாமகவில் யாருக்கு இடம் கொடுப்பது என்பது பாமக முடிவு செய்து, பொதுக்குழு நடத்தி அன்புமணி ராமதாசுக்கு வழங்கப்பட்டது.

1996ம் ஆண்டு நடந்ததை ஜெயக்குமார் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை, 4. பாமக தனித்து நின்று பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4. அதிமுக பலவீனமடைந்த போது, மறைந்த ஜெயலலிதா அவர்கள் எங்களிடம் கூட்டணி வைத்த போது தான் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர்.

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது. அதேபோல, 2001 தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். நாங்கள் எப்போதும் எங்களால் தான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். எங்களால் தான் எடப்பாடி பழனிச்சாமி 2 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் என்றோ, ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பாமக தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது சற்று கவனமாக வைக்க வேண்டும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.