ஈரோட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது, அரங்கநாதர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு, கோயில் வளாகத்தில் பல்லக்கு தூக்கி ஊர்வலாமாக எடுத்து வரப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கோயில் முன்பாக நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில், ஈரோடு, பவானி உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி கனியை பறிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கர ஓசங்களை எழுப்பியபடி இளைஞர்களை மிகுந்த உற்சாகப்படுத்தினர்.
போட்டியின் இறுதியில் பவானி அடுத்துள்ள காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினர்.







