கழன்று விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’: திருமணத்தை நிறுத்திய மணமகள்

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ் குர்ரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பாலா’. இளம் வயதிலேயே…

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுஷ் குர்ரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பாலா’. இளம் வயதிலேயே வழுக்கை விழுந்த இளைஞர் திருமணத்திற்காக தன்னுடைய வழுக்கையை எப்படி மறைக்கிறார் என்ற கதைக்களத்தில் உருவானது இத்திரைப்படம். இப்படத்தைப் போன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்கு முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் முடிந்துள்ளன.  அடுத்த நாள் காலை முக்கிய திருமண நிகழ்வு மட்டும் நடைபெறவிருந்தது. இந்நிலையில், மணமகன் மண்டபத்திற்குள் நுழையும்போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக அவர் தலையில் இருந்த ‘விக்’கும் கழன்று விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். மணமகளை அவருடைய குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் ஒத்துக்கொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, இப்பிரச்னையை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும், மணமகள் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த திருமணத்திற்காக ரூ. 5.66 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அதனை மணமகன் வீட்டார் திருப்பித் தர வேண்டும் என்றும் மணமகளின் வீட்டார் கூறியிருக்கின்றனர். அதற்கு மணமகன் வீட்டாரும் ஒத்துக்கொண்டதை அடுத்து இந்தப் பிரச்னை முடித்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து மணமகளின் மாமா கூறுகையில், மணமகனின் வழுக்கை குறித்து அவர்கள் முன்பே கூறியிருந்தால் மனதளவில் எங்களுடைய பெண்ணை தயார் செய்திருப்போம். ஆனால், அவர்கள் அதை மறைத்தது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.