கேரள கடற்கரைக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! இயற்கையின் அடுத்தடுத்த அடி!

கேரளாவுக்கு கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. …

கேரளாவுக்கு கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.  நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில்,  கேரளா மாநிலத்தின்  கடற்கரைக்கு நாளை இரவு வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதியாக கிடக்கும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’ நிகழ்வு என்கின்றனர்.  இதன்படி, கேரளாவில் கடல் அலை 2.1 மீட்டர் முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால்,  பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் யாரும் கடற்கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.