சென்னை ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து வெற்றியை குவித்து வரும் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 4-0 என ஓயிட்வாஷ் செய்து மீண்டும் அசத்தியுள்ளது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மிண்டும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடக்க ஆட்டத்தில் ஜப்பான், எகிப்து, மலேசியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன. முதலில் குரூப் – பி பிரிவில் ஜப்பான், தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-1 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. எகிப்து அணி ஆஸ்திரேலிய அணியை 4-0 என ஒயிட் வாஷ் செய்தது. மலேசியாவும் கொலம்பியாவும் மோதிய ஆட்டத்தில் 3-0 என கொலம்பியா வென்றது.
ஹாங்காங் சீனா அணியை 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தியது. இந்நிலையில், இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் இன்று மோதின. இதில் இந்திய வீராங்கனை தன்வி கண்ணா, தன்னை எதிர்த்து விளையாடிய ஹேலி வார்ட்- ஐ 3-1 என்ற செட் கணக்கிலும், இந்திய கேப்டன் சவுரவ் கோஷல் தன்னை எதிர்த்து விளையாடிய டேவல்ட் வேன் நீகேர்க்-ஐ 3-0 என்ற நேர் செட் கணக்கிலும் வென்றனர். இதே போன்று ஜோஷ்னா சின்னப்பா தன்னை எதிர்த்து விளையாடிய லிசெல் முல்லர் – ஐ 3-1 என்ற செட் கணக்கிலும், மற்றொரு இந்திய வீரரான அபய் சிங் தன்னை எதிர்த்து விளையாடிய பியர்ரே பிரிட்ஷ் ஐ 3-1 என்ற செட் கணக்கிலும் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் தென்னாபிரிக்காவை இந்திய அணி 4-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. நேற்றைய தினம் ஹாங்காக் – சீன அணியையும், இன்றைய தினம் தென்னாபிரிக்க அணியையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்து, குரூப் B பிரிவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஜப்பானுடனான போட்டி சவாலக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்திய – ஜப்பான் மோதும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







