பாஜக யாத்திரையில் கொடியோடு நின்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்.. புஸ்ஸி ஆனந்த் விளக்கம்..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்  மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார். “என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பாஜக மாநில தலைவர்…

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்  மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.  அதன்படி ராமநாதபுரத்தில் கடந்த 28ஆம் தேதி நடைப்பயணத்தை தொடங்கிய அவர் 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். தற்போது அவர் மதுரையில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலை நடைப்பயணத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதனையடுத்து மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ”விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை மற்றும் அவர்களுக்கும் மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் விரைவில் களமிறங்குவார் என கூறப்படும் நிலையில் பாஜக நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.