பதான் திரைப்படம் 4 நாட்களில் 429 கோடி வசூலித்து பாகுபலி, கேஜிஎஃப்-2 படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளாகின. பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.
நீண்ட நாளைக்குப் பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான இரண்டு நாட்களில் 219.60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக பாலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகர் டாரன் ஆதர்ஷ் தனது டிவிட்டர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நான்காவது நாளாக பதான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டாரன் ஆதர்ஷ் இன்று வெளியிட்ட டிவீட்டில் நான்கு நாட்களின் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி மற்றும் உலகின் பிற பகுதிகளில் ரூ.164 கோடி மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.429 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாகுபலி, கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் சாதனையை பதான் திரைப்படம் முறியடித்துள்ளது. சமீக காலமாகவே ஷாருக் கானின் திரைப்படம் பாலிவுட்டில் சரிவர ஓடாத நிலையில் பதான் படத்திற்கான வரவேற்ப்பு ஷாருக் கானின் கம் பேக் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
– யாழன்








