ஆரணி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்ட
ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி காகிதப்பட்டறை ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப
பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் நடைபெறும் ஐயப்ப சாமி கன்னி பூஜையில் கலந்து
கொள்வதற்காக வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு டெம்போ டிராவல் ஒன்றில் பயணம் செய்தனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பால்வார்த்துவென்றான் கிராமம்
அருகே சென்றபோது டெம்போ டிராவல் வாகனத்தின் டயர் வெடித்ததில் வாகனம்
திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் பயங்கர சப்தத்துடன் கவிழ்ந்துள்ளது.

டெம்போ டிராவலில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் விபத்தில் சிக்கி அபாய குரல்
எழுப்பி உள்ளனர். ஐயப்ப பக்தர்களின் அபாய குரலை கேட்டு பால் வார்த்துவென்றான் பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட ஐயப்ப பக்தர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வேனில் பயணம் செய்த 25 ஐயப்பன் பக்தர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயங்களும் 15க்கும் மேற்பட்ட
பக்தர்களுக்கு சிறு காயங்களும் ஏற்பட்டு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு
வேலூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு சந்தவாசல் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் எவரும்
இல்லாமல் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில்
சிக்கிய பக்தர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அந்த பகுதியில்
பார்த்தவர்கள் அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களே வெகுவாக பாராட்டினர்.







