நடிகை த்ரிஷா குறித்து ஏ.வி.ராஜுவின் சர்ச்சை பேச்சு – சென்னை காவல் ஆணையரிடம் நடிகர் கருணாஸ் புகார்!

நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் பற்றி அவதூறாக பேட்டி அளித்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜு மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் நடிகர்…

நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் பற்றி அவதூறாக பேட்டி அளித்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜு மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்னைக்கு திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கீழ்த்தரமான, கேவலமான மனிதர்கள் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே முன்னாள் அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு, தான் த்ரிஷாவை பற்றி பேசவில்லை எனவும், தன்னை தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் எனவும், த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு மீண்டும் வீடியோ வெளியிட்டு நான் வேறுவிதமாக சொன்ன கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அது போன்று எந்த விதமான தவறான கருத்தையும் குறிப்பிடவில்லை. அது வேறுமாதிரியாக சித்தரிக்கப்பட்டது. நான் கூறிய கருத்துக்கள் த்ரிஷா அவர்களையோ, மற்றவர்களையோ புண்படுத்தும்படி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் என்றும் அவர் விளக்கம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அவர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், வேண்டுமென்று என் மீது தேவையற்ற ஒரு விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகிய தன்னையும் பற்றி அவதூறு பரப்பக்கூடிய வகையில் முன்னாள் அதிமுக நிர்வாகியான ராஜு ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

எனவே உண்மைக்கு புறம்பான அந்த தகவலை எங்களுடைய நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகார் சென்னை காவல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சார்பிலும் புகார் கொடுக்கப்பட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.