நாகர்கோவில் காசியின் லேப்டாப்பிலிருந்த ஆபாச வீடியோக்களை டெலிட் செய்த அவரது தந்தைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் மறுத்துள்ளது.
இளம்பெண்களை ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த 2020ல் நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆதாரங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவரது தந்தைக்கு நீதிமன்றம் தற்போது ஜாமீனை மறுத்துள்ளது.
தங்க பாண்டியன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. “120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது” என விசாரணை முடிவில் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி:
சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக கூறி பணமோசடி செய்துள்ளார் நாகர்கோவிலை சேர்ந்த காசி. இந்நிலையில் இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்த நிலையில், போக்சோ, கந்துவட்டி உள்ளிட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசி இவ்வாறு மிரட்டல் விடுப்பதற்கு அவரிடமிருந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முக்கிய காரணமாகும். இந்நிலையில் காசியின் மடிக்கணினி மற்றும் செல்போனில் 1,900க்கும் அதிகமான நிர்வாண படங்கள், 400க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதை தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதை கொண்டே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை குற்றவாளியின் தந்தை தங்க பாண்டியன் டெலிட் செய்துள்ளார். இது தடயவியல் நிபுணர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 120க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளதால் காசியின் தந்தையை விடுதலை செய்யக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது.
சிபிசிஐடியின் வாதத்தை ஏற்ற நீதிபதி புகழேந்தி, குற்றவாளியின் தந்தைக்கு ஜாமீனை மறுத்து உத்தரவிட்டுள்ளார்.








