இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகவும், முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் வசூலை விட இது 11% அதிகம் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 11% அதிகமாகும். அதேநேரம், கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது. ஜூலையில் ரூ.1.65 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,59,069 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.28,328 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.35,794 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,251 கோடி (பொருள்கள் இறக்குமதி மீதான ரூ.43,550 கோடி உள்பட), செஸ் ரூ.11,695 கோடி (பொருள்கள் இறக்குமதி மீதான ரூ.1,016 கோடி உள்பட) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர், ”கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது வருவாய் 11% அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களிலும் சராசரியாக 11% அதிகரிப்பு காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி கிட்டத்தட்ட 8 % பதிவான நிலையில், ஜிஎஸ்டி வசூல் 11%க்கு மேல் உயா்ந்துள்ளது. வரி விகிதங்கள் அதிகரிக்கப்படாதபோதிலும், ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. சிறந்த இணக்கம், வரி வசூல் முறை மேம்பாடு, வரி ஏய்ப்பு தடுப்பு உள்ளிட்டவையே இதற்கு காரணம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.8,386 கோடி வசூலான நிலையில், தற்போது ரூ.9,475 கோடி வசூலாகியுள்ளது. இது 13% அதிகரிப்பாகும். நாட்டில் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் முறையே ரூ.1.57 லட்சம் கோடி, ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சாதனையாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. விழாக் காலம் நெருங்குவதால், எதிர்வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.







