ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை கொடுந்துயர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
1947ல் அறிவிக்கப்பட்ட இந்திய விடுதலைச் சட்டம் காரணமாக ஏற்பட்ட பிரிவினையால் 12.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பொருட்சேதமும், ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த கொடுந்துயரை அனுசரிக்கும் விதமாக ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுந்துயரம் நினைவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட வன்முறையை நினைவில் கொண்டு அதை தவிர்த்து வாழ இத்தினம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது. இரக்கமற்ற வெறுப்பு மற்றும் வன்முறையால் லட்சக்கணக்கான நமது சகோதர சகோதரிகள் இடம் பெயர்ந்துள்ளனர். பலர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இந்த தியாகங்களின் நினைவாக ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுந்துயரம் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.







