பழனியில் அரசு மருத்துவரை தாக்கி 100 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை!

பழனியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை தாக்கி 100 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக…

பழனியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை தாக்கி 100 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். மனைவி மற்றும் மகளுடன் வசித்துவரும் பழனி அண்ணாநகரில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். மருத்துவ மேற்படிப்பிற்காக சென்னையில் தங்கி படித்து வரும் தன் மகளை பார்க்க இவரது மனைவியும் சென்னை சென்றுள்ள நிலையில் மருத்துவர் உதயகுமார் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையிலிருந்து பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த மருத்துவர் உதயகுமாரை அதிகாலை முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள் தட்டி எழுப்பியதை அடுத்து,கூச்சலிட முயன்ற மருத்துவர் உதயகுமாரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டுள்ளனர்.

மேலும் வீட்டில் வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ.20 லட்சத்தையும்
திருடி சென்றுள்ளனர். பின் கொள்ளையர்கள் சென்றபிறகு மருத்துவர் உதயகுமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து உதயகுமாரை
மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர் உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர காவல் துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.