புலம்பெயர்ந்த தொழிலாளியை குறிவைத்து காஷ்மீரில் தாக்குதல்-ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த வந்த 370வது…

ஜம்மு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த வந்த 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு உஷார் நிலையில் இருந்த போதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தில் உள்ள கதூரா கிராமத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தினர்.

இறந்த தொழிலாளி பீகாரின் சக்வா பராஸ் பகுதியைச் சேர்ந்த முகமது மும்தாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த பீகாரைச் சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் முகமது மக்பூல் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தும் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டது.

இதை ஒரு இருண்ட நாளாக பிராந்திய கட்சிகள் அனுசரிக்கின்றன. 2019ம் ஆண்டு அக்டோபர் முதல், உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள் அடிக்கடி பயங்கரவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள்.

காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இந்துக்கள் மீதான இலக்கு தாக்குதல்கள் பெரும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளன.

மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த தொடர் இலக்கு தாக்குதல்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட் ஊழியர்களும் ஜம்முவைச் சேர்ந்த ஊழியர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கள் பணிகளுக்குச் செல்லவில்லை.

இந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பாக உணராததால் ஜம்முவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.