வழி மாறியவர்களை நேர் வழிப்படுத்தும் காவல் உதவி ஆணையர்; குவியும் பாராட்டு!

பொதுவாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். அடுத்த முறை அந்த குற்றத்தை செய்யாமல் இருப்பதற்கு தண்டனை வாங்கி கொடுத்து அதன் மூலமாக குற்றத்தை தடுக்கும் வேலையை தான் பெரும்பாலும்…

பொதுவாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். அடுத்த முறை அந்த குற்றத்தை செய்யாமல் இருப்பதற்கு தண்டனை வாங்கி கொடுத்து அதன் மூலமாக குற்றத்தை தடுக்கும் வேலையை தான் பெரும்பாலும் காவல்துறையினர் செய்து வருவார்கள்.

கடுமையான தண்டனைகள் மட்டுமே குற்றத்தை குறைக்க முடியும் என்ற நிலை மட்டும் இல்லாமல் குற்றம் செய்ததற்கான குற்றவாளிகளின் சூழ்நிலை என்ன என்பதை அறிந்து , அவர்கள் திருந்தி நேர்வழியில் வாழ்வதற்கு உதவினாலும் குற்றத்தையும் குறைக்கலாம், குற்றவாளிகளும் குறையலாம் என்பதை நிரூபித்துள்ளார் சென்னை ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன்.

தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் குற்றங்களை குறைக்க எடுத்த புதிய முயற்சி பல்வேறு தரப்பில் பாராட்டை பெற்றுள்ளது.சென்னை ஐஸ் ஹவுஸ் ஜவஹர் ஹுசைன் தெருவை சேர்ந்தவர் பாலம்மாள். இவரது கணவர் செல்வம். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பாலம்மாள் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில் பாலம்மாள் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்து அதில் வரும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் போது கையும் களவுமாக பாலம்மாள் பல முறை போலீசாரிடம் சிக்கி கைதாகி உள்ளார். பாலம்மாள் மீது 10க்கும் மேற்பட்ட சாராய விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் மீண்டும் பாலம்மாள் மது விற்பனை செய்த போது ஐஸ் ஹவுஸ் போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளார்.

அப்போது தொடர்ச்சியாக கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்து கைதாகி வரும் பாலம்மாளிடம் ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும்
காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி உள்ளனர்.

பாலம்மாளின் கணவர் செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வேலை தெரியாமல் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாலம்மாள் போலீசாரிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உடனே உதவி ஆணையர் பாலமுருகன் உத்தரவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விஜய கிருஸ்ணராஜ், பாலம்மாளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் தனது சொந்த செலவில் சாப்பாடு நடத்துவதற்கான தள்ளுவண்டி, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அவருக்கு வழங்கினார்.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் உட்பட இரு மகள்களை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் 10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாப்பாடு கடை வைத்து கொடுத்த ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும் காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு நன்றி என பாலம்மாள் தெரிவித்தார். குற்றச்செயல்களில் ஈடுபடும் போது பயத்தோடு வாழ்ந்த வாழ்க்கை மாறி தற்போது காவல்துறைக்கு பயப்படாமல் வாழ முடியும் என பாலம்மாள் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மயிலாப்பூர் சிட்டி சென்டர் பகுதியில் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடத்தியதில் 17 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதாலும் தனது உறவினர்கள் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாலும் தவறான வழியில் சென்று சம்பாதிக்கலாம் என நினைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

முதன்முறை குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சித்து மாட்டிக்கொண்ட சிறுவனை உதவி ஆணையர் பாலமுருகன் உதவியில் அபிராமபுரம் சென்னாபுரி அன்னதான அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிலையத்தில் ஐடிஐ ஏசி மெக்கானிக் படிப்பில் சேர்வதற்கு உதவியுள்ளார். படித்து முடித்து வந்தால் வேலையும் வாங்கித் தருவதாக கூறி உத்தரவாதத்துடன் மாணவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். காவல்துறையின் உதவியின் மூலமாகவே படித்த பள்ளியில் இருந்து சான்றிதழ்களை வாங்கி இந்த கல்வி நிலையத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இனி தவறான வழிக்குச் செல்லாமல் படிப்பதை லட்சியமாகக் கொண்டு படிக்க ஆரம்பித்துள்ளார் அந்தச் சிறுவன்.

முதன்முறை குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் சரி பல வருடங்களாக குற்றம் புரிந்தவர்களாக இருந்தாலும் சரி வாழ்க்கை சூழ்நிலையை புரிந்து கொண்டு நேர்வழியில் வாழ்வதற்கு உதவும் ராயப்பேட்டை உதவி ஆணையர் மற்றும் அவர்கள் கீழ் பணி புரியும் ஆய்வாளர்களின் செயல் பல காவல் அதிகாரிகளுக்கு உதாரணமாக மாறி வருகிறது.

-சுப்பிரமணியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.