பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குடியிருப்பு பகுதியில் வெங்கடேசன் மது அருந்தியதாகவும் அதை, செந்தில்குமாரின் உறவினரும் பாஜக பிரமுகருமான மோகன்ராஜ் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார், அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். தகவல் அறிந்ததும், கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கொலையாளிகள் விட்டுச் சென்ற வாகனங்கள் மற்றும் சிசிடிவி., காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லமுத்து (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் முக்கிய நபரான
வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சோனை முத்தையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன் தெரிவித்துள்ளார்.







