அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்கானிப்பில் உள்ளார்.
இதையடுத்து தனது உடல்நிலை குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், சிறிய உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், டிடிவி தினகரன் தற்போது நலம்பெற்று வருகிறார் எனவும் அவரது உடல்நிலையை எங்கள் மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.







