டெல்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கலாம் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

வெள்ளப்பெருக்கினால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதையடுத்து டெல்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட…

வெள்ளப்பெருக்கினால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதையடுத்து டெல்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஏற்கெனவே யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். டெல்லி அரசு மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்ட வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று காலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

”டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் முதல்முறையாக இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பம்புகள், இயந்திரங்களில் தண்ணீர் புகுந்ததால் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் 25% நீர் விநியோகம் குறையும். ஆழ்குழாய்க் கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கலாம்.

நாளை மாலைக்குள் தண்ணீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என நம்புகிறேன். பொதுப்பணித்துறை கணிப்பின்படி இன்று மாலை 3-4 மணிக்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் உச்சத்தை அடையும். அதன்பின்னர் குறையத் துவங்கும்’ என தெரிவித்தார். மேலும் அத்தியாவசியம் இல்லை என்றால் மக்கள் வெளியே வர வேண்டாம். அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்ய முயற்சி செய்யுங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.