பாஸ்டீல் தின அணிவகுப்பு நிகழச்சியில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு பாரீஸ் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை நடைபெறும் பாஸ்டீல் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று, பிரான்ஸ் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடிக்கு, பாரீஸ் நகரில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு இசைக்கலைஞர்கள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை பிரான்ஸில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து உரையாற்றும் பிரதமர் மோடி, பின்னர் அதிபர் மேக்ரான் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்.
இந்தப் பயணத்தின்போது மேக்ரானுடன், பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருநாட்டு உறவை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இருவரும் விவாதிக்க உள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








