ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கான தேவையை கருத்தில்கொண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், போதுமான அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததால் 2018 – 19ம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் குறைந்துவிட்டது.
இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. இது குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டரில் ”முதலில் ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஊழலை ஒழிப்போம் என்றனர், தற்போது அவற்றை தடை செய்து, ஊழலை ஒழிப்போம் என்கின்றனர். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்” என பதிவிட்டிருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மை இருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற பேச்சு ஏற்கத்தக்கது அல்ல” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் எம்.பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.







