ஜனவரிக்கு முன்னதாக கலைஞர் நினைவு நூலகம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சாலைகளை விரிவாக்கம் செய்வது கட்டாயம் எனவும் சாலை விரிவாக்கத்திற்காக சோழகாலம் மற்றும் விஜயநகர பேரரசு காலங்களில் வைக்கப்பட்டிருந்த மரங்களாக இருந்தாலும் கட்டாயம் அகற்றப்படவேண்டி உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மரங்களை வைக்க அமைச்சர்களுக்குச் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்களை வைக்க ஆந்திராவிலிருந்து மரக்கன்றுகள் வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறி அதிக அளவில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அகற்ற ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி இருப்பதாகத் தெரிவித்த அவர், 60 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் நான்கு சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘கம்பேக் கொடுத்தாரா லிங்குசாமி, தி வாரியர் திரைப்படத்தின் விமர்சனம்’
தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், தற்போது உள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.








