முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் டெல்லி பல்கலைக்கழகம் தொடர்பாக, அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது உண்டு. தற்போது, ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது, தலைநகரில் வாழும் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1922-ல் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட மொத்தம் 3 லட்சம் பேர் பயின்று வருகின்றனர். டெல்லியில் கணிசமான அளவில் தமிழர்கள் வாழும் நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்தவகையில், தமிழ் மொழியில் சான்றிதழ் படிப்பு முதல் முனைவர் பட்டம் வரை நடத்தப்படுகிறது. எனினும், 4 பணியிடங்கள் கொண்ட தமிழ்த்துறைக்கு, நீண்ட காலமாக ஒரேயொரு பேராசிரியர் மட்டும் பணியாற்றி வந்தார். இதுகுறித்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து, மேலும் இருவர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

2019 மே மாதம், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் இடம்பிடித்து விடுவதால், டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பேசியது சர்ச்சையானது. அப்போது ஆம் ஆத்மி கட்சிக்காக, டெல்லியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜும், அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தது கடும் விமர்சனங்களை எழுப்பின.

தமிழ் மாணவர்களின் கல்விக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், JNU என சுருக்கமாக அழைக்கப்படும், புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. இது தலைநகர் தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனிடையே, 2017 ஜூன் மாதம், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் படிப்பில், விருப்ப மொழிகளில் ஒன்றாக தமிழும் சேர்க்கப்பட்டதை அடுத்து, பிற மொழி மாணவர்களும் தமிழை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், தற்போது ஆங்கில இலக்கிய பாடத் திட்டத்தில் இருந்து, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது, தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இவ்வாறு நடைபெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2018 நவம்பரில், பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா ஷெப்பர்ட் எழுதிய 3 நூல்களை, முதுகலை படிப்புகளுக்கான அரசியல் விஞ்ஞான பாடத் திட்டத்திலிருந்து, டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 2014-ல் மட்டும், ஆசிரியர்கள் போராட்டம், மாணவர்களின் Kiss of Love போராட்டம், துணைவேந்தர் ராஜினாமா, சட்டப்படிப்புக்கு அனுமதியை புதுப்பிப்பு தொடர்பாக பார் கவுன்சிலுடன் மோதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2018-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் அங்கிவ் பைசோயா என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் அவர் எம்.ஏ படிப்பில் சேருவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்ததாக கூறி, சமர்ப்பித்த சான்றிதழ் போலியானது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

ஏற்கனவே, அடுத்த கல்வியாண்டு முதல், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கடைபிடிக்கப் போவதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகால படிப்பாக மாற்றப் போவதாக, டெல்லி பல்கலைக்கழகம் கடந்த டிசம்பரில் முடிவு எடுத்தது, பலதரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தொடர் சர்ச்சைகளால் தான், டெல்லி பல்கலைக்கழகம் தொடர்ந்து புகழின் வெளிச்சத்தில் இருப்பதாக, சில நெட்டிசன்கள் நகைச்சுவையாக விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உதவும் இஸ்லாமியர்: குவியும் பாராட்டுக்கள்!

Halley karthi

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு

Jeba Arul Robinson

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்

Halley karthi